ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000 நபர்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் இரண்டு மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்.இதன் மூலம் ரசீது உள்பட மதுபானம் விற்பனை அனைத்தும் கண்காணிக்க முடியும். 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கோவில் மற்றும் மக்களின் புகாரின் அடிப்படையில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர புதிய கடைகள் திறக்கவில்லை.
டாஸ்மாக் தொழிற்சாலைகள் கொடுத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஊதிய பேச்சுவார்த்தை என்பது நிதி துறை உள்பட மற்ற துறைகளையும் ஒப்பிட்டு செய்யவேண்டிய பணி அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்த்து வைக்க வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மீதமுள்ள குளங்களுக்கு சோதனையோட்டம் செய்ய முடியவில்லை. அடிப்படை கால தாமதத்திற்கு காரணம் திட்டத்தின் முகப்பின் நிலம் கையகப்படுத்தல் செய்யாததாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 26 விவசாயிகள் வீட்டிற்கு சென்று பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுவிலக்கு துறையில் தினமும் ரூ. 10 கோடிக்கு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் அமைச்சர் முத்துசாமிடம் கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் ஒரு இடத்தில் கூட இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க திறந்த மனதோடு தயாராக இருக்கின்றோம் என்றார்.