டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் சம்பா பருவம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களை அடியுரம் இடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் டி.ஏ.பி. உர உற்பத்திக்கு மாற்றாக விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களான 20:20:0:13, 10:26:26, 15:15:15 ஆகியவைகளை பயன்படுத்தலாம். மேலும், நானோ டிஏபி அனைத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திலும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தும் போது இதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் ஆகியவை பயிர்களுக்கு தேவையான கூடுதல் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தினால் அதிக மகசூலை பெறலாம். இதனை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் உரம் தொடர்பான விவரங்கள், புகார்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.