தஞ்சாவூர், ஜூலை 9 – போக்குவரத்து நெரிசல் மிகுந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்த தொழிலாளியை கடையிலிருந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அடுத்த களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (22),. இவர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள மங்களபுரம் பகுதியில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பைக்குகளில் 6 மர்ம நபர்கள் வந்து கடை முன் இறங்கினர்.
அவர்களை பார்த்ததும் ஸ்ரீராம் கடையில் இருந்து வெளியே வந்து தப்பியோட முயன்றார்.
ஆனால் அந்த மர்ம நபர்கள் கடையிலிருந்து சில அடி தூரத்திலேயே ஸ்ரீராமை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டித்தள்ளினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் அலறிக் ஓடினர்.
தொடர்ந்தது அந்த மர்ம நபர்கள் தங்கள் வந்த பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர். சாலையிலேயே ஸ்ரீராமின் உடல் கிடந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த எஸ். பி.,ஆஷிஷ் ராவத், டவுன் டி எஸ் பி ராஜா, வல்லம் டிஎஸ்பி நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வி வந்து ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் நடத்திய, முதல்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை பகுதியை சேர்ந்த பிரின்ஸ் லாரா (எ) சின்னா (28), கடந்த 2022ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஸ்ரீராம் உட்பட சிலரை வல்லம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே, பிரின்ஸ் லாரா கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.