Skip to content

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எதற்காக இந்த கொலை சம்பவம் என்ற காரணம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியின் மகள் புவனேஸ்வரி (20). இவரும், ஒரத்தநாடு கீழவன்னிப்பட்டு அம்பலக்கார தெருவை சேர்ந்த சபரி (23) என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் புவனேஸ்வரியும் அவரது கணவர் சபரியும் வழுத்தூரில் தமிழரசன், ரேவதி வேலை பார்க்கும் செங்கல் சூளைக்கு வந்து தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புவனேஸ்வரி- சபரி தங்கியிருந்த குடிசை வீட்டுக்குள்ளிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அக்கம் பக்கத்தினர் பரபரப்பாக ஓடி வந்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்து சபரி வெளியில் ஓடியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குடிசைக்கு  உள்ளே சென்று பார்த்தபோது புவனேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அவர்கள் புவனேஸ்வரியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய சபரியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் தஞ்சை கைரேகை நிபுணர் சிலம்பரசன், தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர்.

திருமணமான புதுப்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தப்பியோடிய சபரி குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சபரியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபரி எதற்காக தனது மனைவியை கொலை செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த போது சபரியும், புவனேஷ்வரியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். சபரி கண் விழித்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார்  கூறுகிறார்கள்.

error: Content is protected !!