தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜ மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜமனோகரனுடன் மூத்த மகள் மனோ ரம்யா. இளைய மகள் மனோ சித்ரா ஆகியோர் வசித்து வந்தனர். இதில் மனோ ரம்யா தனது கணவர் ராஜ்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்று தந்தையுடன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தன் மனைவி மீது ராஜ்குமார் கோபமாக இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை குளியலறையில் வாயில் துணி அடைக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராஜமனோகரன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது மகள்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவக்கல்லூரி போலீசுக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ராஜமனோகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனோ ரம்யாவின் கணவர் ராஜ்குமார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மனைவி மனோ ரம்யாவை கொலை செய்வதற்காக வந்தபோது ராஜ்குமாரிடம், ராஜமனோகரன் மாட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.