தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். கடற்கரை நகரம் . இங்கு செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. 25 வயதானவர். எம்.ஏ. பி. எட். தமிழ் படித்தவர். கடந்த 4 மாதங்களுக்கு முன் பள்ளி மேலாண்மை குழு மூலமாக பணியில் சேர்ந்தார்.
இவர் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை என்ற கிராமத்தை சேர்ந்த முத்து என்ற விவசாயியின் மகள் . 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊரில் இருந்து ரமணி பள்ளிக்கு சென்று வந்தார்.
ரமணி வசித்து வந்த அதே சின்னமனை என்ற கிராமத்தை சேர்ந்த மீனவர் சொசைட்டியின் தலைவர் பன்னீர் செல்வத்தின் மகன் , 30 வயதான மதன் குமார். இவர் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
மதன் குமாருக்கு, ரமணி மீது ஒருதலைக்காதல். ரமணி பள்ளிக்கு செல்லும்போது, வரும்போது அவரை பின்தொடர்ந்து வந்தார். ஆனால் ரமணியிடம் இருந்து பச்சை சிக்னல் வரவில்லை. எனவே முறைப்படி பெண் கேட்போம் என கருதிய மதன் குமார், தனது விருப்பத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார்.
கடந்த 2 வாரத்திற்கு முன் மதன் குமாரின் பெற்றோர், முத்துவிடம் பெண் கேட்டு உள்ளனர். அதற்கு முத்து மறுத்து விட்டார். என் மகள் ஆசிரியை வேலைக்கு படித்து இருக்கிறார். இன்னும் அவள் சம்பாதிக்க வேண்டும். இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறி விட்டார்.
அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது …… என்பது போல மதன் குமாருக்கு இப்போது ரமணி மீது காதல் கனலாய் கனன்றது. நாளுக்கு நாள் நெருப்பாக சுட்டது. எனவே மீண்டும் ரமணியை பின் தொடர்ந்தார். அதற்கும் ரமணி இடங்கொடுக்கவில்லை.
இன்று காலையில் இருந்து மல்லிப்பட்டினம் பகுதியில் மழை தூறிக்கொண்டே இருந்தது. ஆசிரியை ரமணி வழக்கம் போல பள்ளிக்கு வந்தார். 10.30 மணி அளவில் வகுப்பில் தமிழ் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அத்து மீறி நுழைந்த மதன்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை ரமணியின் கழுத்து, வயிற்று பகுதிகளில் சரமாரி குத்தினார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் உஷாராவதற்குள் மாறி மாறி குத்திவிட்டார். நிலைகுலைந்த ஆசிரியை வகுப்பறையிலேயே சாய்ந்தார். உடனடியாக மாணவர்கள் கூச்சல் போட்டனர். அதற்குள் அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
மாணவர்களும், சக ஆசிரியர்களும் சேர்ந்து மதன்குமாரை பிடித்தனர். உடனடியாக சேதுபாவாசத்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து மதன்குமாரை கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
ஆசிரியை கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை கலெக்டர் பங்கஜம், எஸ்பி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், மற்றும் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது.
தகவல் அறிந்த ஆசிரியையின் பெற்றோர் மற்றும் 2 அண்ணன்கள், தங்கை ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவரை பட்டுக்கோட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விட்டனர் அங்கு உறவினர்கள் சென்றபோது அவர் இறந்து விட்டார். சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.