தஞ்சாவூர் மாவட்டம் வளம்பகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (65). இவர் செங்கிப்பட்டியில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 11ம் தேதி வியாபாரத்திற்காக ஆட்டோவில் வாழை இலைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு செங்கிப்பட்டிக்கு வந்துள்ளார். ஆட்டோவில் இருந்து வாழைக்கட்டுகளை கீழே இறக்கி வைக்கும் போது கோவிந்தம்மான் கையில் வைத்திருந்த பணப்பை கீழே தவறவிட்டுள்ளார். இதை கவனிக்காமல் கோவிந்தம்மாள் சென்றுவிட்டார். சற்று நேரத்திற்கு பின்னர் பணப்பை காணாமல் அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் பல இடங்களிலும் தேடி பார்த்தும் பணப்பை கிடைக்கவில்லை. இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செங்கிப்பட்டி கடைவீதி பகுதியில் இருந்த சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கோவிந்தம்மாள் தவறவிட்ட பணப்பையை மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் எடுப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் யார் எந்த ஊர் என்பது குறித்து செங்கிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் பாளையப்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜன் (56) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுந்தர்ராஜன் வீட்டிற்கு சென்று விசாரித்த போது பணப்பை கீழே கிடந்தது. அதை எடுத்து வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் இருந்து அந்த பணப்பையை போலீசார் மீட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார் அந்த பணப்பையை மூதாட்டி கோவிந்தம்மாளிடம் ஒப்படைத்தனர். தவறவிட்ட பணத்தை விரைந்து விசாரித்து 3 நாட்களில் மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு கோவிந்தம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். செங்கிப்பட்டி போலீசாரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.