தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.மனோகர், விவசாயி, இவருடைய மனைவி லதா.இவர்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் (28).
இவர் கடந்த 2019 முதல் குவைத் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் தனியார் கட்டுமானப் கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ரிச்சர்ட் இங்கு வந்தி்ருந்தார். ஒன்றரை மாத விடுமுறை முடிந்து மீண்டும் குவைத் திரும்பினார்.
இந்நிலையில் குவைத் நாட்டில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் ஒரே கட்டிடத்தில் தங்கி இருந்த 150-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கினர். இதில் சுமார் 50 பேர் பலியானார்கள்.
தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தான் ரிச்சர்ட் ராய் தங்கி இருந்தார். விபத்துக்கு பிறகு அவரைப்பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவரது போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.அங்கு தங்கியுள்ள அவருடைய நண்பர்களிடம் கேட்டபோது எந்த தகவலும் தெரியவில்லை.
தங்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் குறித்த எந்த தகவலும் தெரியாததால் அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கள் மகன் குறித்த தகவலை தெரியாமல் தவித்து வரும் அவர்கள் தங்கள் மகனை பத்திரமாக மீட்டுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.