தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் சில நாய்கள் எதையோ கடித்து இழுப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.அங்கு கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு எஸ் பி ஆஷிஷ் ராவத், வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர்.
அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும்.
மேலும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் மர்ம நபர்கள் வேறு எங்கேயாவது கொலை செய்து விட்டு இப்பகுதியில் சடலத்தை வீசி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.