Skip to content

தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த மினி டைடல் பூங்காக்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், ரூ.17.04கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள், ரூ36.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 48 நபர்களில், 5 நபர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, டிஆர்பி ராஜா, மகேஸ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் முருகானந்தம், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!