தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது.
தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகைக்கு கடைகளை எடுத்த வியாபாரிகள் தஞ்சை அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.