வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் தஞ்சை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் விடாது மழை கொட்டியது. இன்றும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்தார்.
விடிய விடிய செய்த கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் திவான் நகர் என்ற பகுதியில் திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்து சேதமானது இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மானம்புச்சாவடி பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாக்கடை கழிவுநீரும் கலந்து சென்றதால் மக்கள் அவதியடைந்தனர். இந்த சாக்கடை கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம் உட்பட பகுதிகளில்சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் கார்த்திகை பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலை சுமார் 50 ஏக்கரில் கனமழையால் சேதம் அடைந்துள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டாரத்தில் ஊரணிபுரம், சிவவிடுதி பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட நிலக்கடலை முளைத்து வந்த நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் முழுமையாக அழுகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி குளம்போல காட்சி அளிக்கிறது. இதில் அருளானந்த நகர் நான்காவது தெருவில் மழை நீர் சாலையில் வடிய வழியில்லாமல் தேங்கியுள்ளதாலும், சாலையின் உயரம் உயர்ந்துள்ளதாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணைக்கு வரும் மழைநீர் மற்றும் பாசன நீர் 2533 கன அடி அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.
கும்பகோணத்தில் பெய்த கனமழையால் கொரநாட்டுகருப்பூர், பழவத்தான்கட்டளை, தேனாம்படுகை, உள்ளிட்ட பகுதிகளில் 2 குடிசை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
சிதம்பரநாதபுரம், கருப்பட்டிச்சேரி, குறிச்சி, மருத்துவக்குடி, கூத்தனூர் 5 வீடுகள் சுவர் இடிந்து விழுந்து யாருக்கும் காயம் இல்லை.. நல்லதாடி பகுதியில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த பொது மக்களை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். கும்பகோணம் அருகே சோழன் மாளிகை பகுதியில் சம்பா சாகுபடி வயல்களை மழை நீர் மூழ்கடித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை முடிவடைந்த 24 மணிநேரத்தின் மழையளவு(மி.மீ) வருமாறு: திருவிடைமருதூர் 196, மஞ்சளாறு 191, கும்பகோணம் 179, அணைக்கரை 168, பாபநாசம், அய்யம்பேட்டை 124, பூதலூர் 115, திருக்காட்டுப்பள்ளி 85, திருவையாறு 78, கல்லணை 62, பட்டுக்கோட்டை 58, ஒரத்தநாடு 55, ஈச்சன்விடுதி 46, அதிராம்பட்டினம் 43, குருங்குளம், வெட்டிக்காடு, நெய்வாசல் தென்பாதி 37, தஞ்சாவூர் 35, வல்லம் 21, மதுக்கூர் 20, பேராவூரணி 17.
மழை காரணமாக மாவட்டம் முழுவதும் 37 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ஏழு கால்நடைகள் உயிரிழந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் இந்த தொடர் மழை நீடித்தால் சம்பா, தாளடி சாகுபடி பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.