தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை. இங்குள்ள மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வார்டில் பிரசவித்த தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 50 பேர் இருந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் அவர்கள் அங்கிருந்து குழந்தைகளுடன் தப்பி வேறு பகுதிக்கு சென்றனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், குழந்தைகளையும் தாய்மார்களையும் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்ல உதவினர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வந்தனர். அவர்கள் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். சிறது நேரத்தில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மருத்துவமனையில் தீ விபத்து பற்றி கேள்விபட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அதற்குள் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. பொதுமக்களை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் மருத்துவமனை காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.