சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது.. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரை பெற்று குறுவை பயிர்களை காப்பாற்ற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை தஞ்சை அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த பஸ்களை மறித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சில விவசாயிகள் சாலையில் படுத்து கோஷமிட்டனர்.
அப்போது உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரைப் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. தஞ்சை மாவட்டம் பூதலூரில் நாளை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.