Skip to content
Home » சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். நடப்பாண்டு தண்ணீர் இல்லாத நிலையில் மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், ராமநாதபுரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால்களில் வர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஒரு போக சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் வயலை தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வயல்களில் உள்ள களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது சீராக்கி கொண்டால் நாற்று விட்டு நடும் பணிகளை விரைவாக தொடங்கி விடலாம் என்பதால்தான். கடந்த வாரத்தில் வயலை உழுது தயார் நிலையில் வைத்திருந்த விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதையடுத்து விவசாயிகள் வயல்களில் எரு அடித்துள்ளனர். சம்பா சாகுபடியை பொறுத்தவரையில் விவசாயிகள் நீண்டநாட்கள் ரகமான  நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் பலரும் பாய் நாற்றங்கால் சாகுபடியும், சில விவசாயிகள் நாற்று விடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயப்பணிகள் இப்பகுதிகளில் மும்முரம் அடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் ஒரு பக்கம் கல்லணைக்கால்வாய் மறுபுறம் வெண்ணாறு ஆற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் பம்ப்செட் வைத்து முப்போகம் சாகுபடி செய்கின்றனர். ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் இந்தாண்டு ஜூன் மாதம் மேட்டூர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளவில்லை. பம்ப் செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.

தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்து உள் வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் சம்பா சாகுபடியை தொடங்கி உள்ளோம். வயல்களில் தண்ணீர் தேக்கி, உழுது சமன்படுத்தும் பணிகளில் உள்ளோம். குறுவை சாகுபடி செய்யாததால் வயல்களில் அதிகளவு களை மண்டிக்கிடந்தது. எருக்கம் செடிகள் வயல் முழுவதும் மண்டி இருந்தது. இவற்றை முழுமையாக அகற்றி, உழுது தயார்படுத்தி தண்ணீர் தேக்கி உள்ளோம். இதனால் வயல்களில் காற்றோட்டம் நன்கு இருக்கும். மண் பொலபொலப்பாகி வயல் நாற்று நடும் போது மிகவும் எளிதாக இருக்கும்.

சிலர் நாற்று நடும் பணிகளிலும், சிலர் பாய் நாற்றங்கால் வாங்கி நடும் பணிகளிலும் இறங்கி உள்ளனர். விவசாயப்பணிகள் மும்முரம் அடைந்துள்ள நிலையில் தேவையான உரம் கையிருப்பில் இருப்பு வைத்துக் கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு போக சம்பா சாகுபடியை விவசாயிகள் ஒரே நேரத்தில் தொடங்கி உள்ளதால் இடுபொருட்கள் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!