தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவநர் சுகுமாறன். இவர் தனது மகன் மனோஜ்குமாரை ( கல்லூரி மாணவர்)காணவில்லை என கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த அப்துல்ரகீம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மனோஜ்குமார் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து துப்பு துலக்கியதில் தஞ்சை ரவுடி வெடி கோபி(35), அவனது கூட்டாளி விளார் ரோடு முத்து என்கிற பிரசாந்த்(37), ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவரையும் போலீசார் கைது செய்தனர். காதல் முன் விரோதத்தில் அவர்கள் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு தஞ்சை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சத்யதாரா, வழக்கை விசாரித்து வெடிகோபி, முத்து என்கிற பிரசாந்த் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், இந்திய தண்டனை சட்டம் 201ன் படி தலா 4 ஆண்டுகள் சிறையும் முறையே ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ரவுடி வெடிகோபி மீது 6 கொலை மற்றும் 5 கொலை முயற்சி உள்பட 27 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.