தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார். இவரது இ– மெயிலில் இருந்து டில்லியில் உள்ள பிரதமர் மோடி அலுவலக மெயிலுக்கு மோடி குறித்து அவதூறு கருத்து பதிவிடப்பட்டு இருந்ததாகவும் அதனால் அவரை சிபிஐ விசாரிப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து டில்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரியான சஞ்சய் கெளதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த 15ம் தேதி காலை 6 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி விசாரணை நடத்த தொடங்கினர். சுமார் ஒன்றை மணி நேரத்திற்கு பிறகு, அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் காரில் தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர். தஞ்சாவூரில், 2 நாட்களாக அவரிடம் சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் விக்டே ஜேம்ஸ் ராஜா மெயிலில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகளின் ஆபாச படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பாகத்தான் விசாரணை நடப்பதாகவும் இன்னொரு தகவல் இன்று கூறப்படுகிறது. விக்டர் ஜேம்ஸ் ராஜாவுடன் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. சென்னையில் 2 பேரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் தந்தை ஜெயபால், தாய் மணி ஆகியோர் கூறியதாவது; எங்களின் மகன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. விசாரணை நடத்தும் இடத்திலும் எங்கள் மகனை பார்க்க அனுமதிக்கவில்லை. எங்கள் மகன் எந்த தவறும் செய்து இருக்க மாட்டான். அவனை விட்டு விடுங்கள், எங்கள் மகனை காப்பாற்றி கொடுங்கள் என கண்ணீர் வடித்தனர்.
கடந்த ஆண்டு இதுபோல திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பூமாலைப்பட்டியை சேர்ந்த ஒரு பட்டதாரி வாலிபரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்க்கது.