தஞ்சை அருகே அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களில் தம்பதி உள்பட 4 பேர் இறந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:
தஞ்சை அம்மாபேட்டை அருகே உள்ள ஆலங்குடி கன்னித்தோப்பை சேர்ந்தவர் மதியழகன்(55), முனியாண்டி(60), பேச்சிமுத்து(55). இவர்கள் மூவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில்புள்ளவராயன் குடிகாட்டில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அம்மாபேட்டை அருகே நத்தம் என்ற இடத்தில் டூவீலருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அவர்கள் ரோட்டின் வலதுபுறம் திரும்பினர். ரோட்டை கவனிக்காமல் அவர்கள் திரும்பியதால் அப்போது எதிரே வந்த ஒரு லாரி டூவீலர் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த வழியாக தஞ்சையில் இருந்து வந்த ஒரு வேன், ரோட்டில் விழுந்து கிடந்த மதியழகன், முனியாண்டி ஆகியோர் மீது ஏறியது. இதில் இருவரும் சம்பவ
இடத்திலேயே இறந்தனர். சுப்பிரமணி என்பவர் படுகாயத்துடன் தப்பினார். மூவரும் கூலித்தொழிலாளர்கள்.
தகவல் அறிந்ததும் அம்மா பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (72). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி தமிழரசி (58). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று இரவு திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தனபால் அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரது மனைவிதமிழரசி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்க் கொண்டுள்ளனர்.