தஞ்சாவூர்: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 11ம் தேதி நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடக்கோரி, தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காவிரி படுகை மாவட்டங்களில் வரும் 11ம் தேதி கடையடைப்பு மற்றும் மாபெரும் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, திராவிட கழக மாவட்ட தலைவர் அமர்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர பொருளாளர் துரைசிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலாளர் அண்ணாதுரை, விவசாய கட்சி பிரதிநிதிகள் கண்ணன், கோவிந்தராஜ் மற்றும் விவசாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.