சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார்.
ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு தொடர்பாக கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக புதிய மனு தாக்கல் செய்ததை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் சுட்டிக்காட்டினர்.
வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவனிடம் கோரிக்கை வைத்தார். புதிய மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.