தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இந்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி வைத்தார்.
விழாமேடையில் சில மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் டெபிட் கார்டுகளை முதல்வர் வழங்கி வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:
கல்லூரியில் நான் நுழைந்தவுடன் கொடுத்த வரவேற்பு அந்த எனர்ஜிக்கு நன்றி. நான் வருவதற்க முன்பே, நேற்றே வங்கி கணக்கில் தலா ரூ.1000 போட்டு விட்டு தான் வந்தேன். பணம் வந்து விட்டதா, (வந்து வி்ட்டது என குரல்) மகிழ்ச்சி. எத்தனை திட்டங்கள் செயல்படுத்தினாலும் ஒருசில திட்டங்கள் தான் நம் மனசுக்கு நிறைவாக இருக்கும். அப்படி ஒரு திட்டம் தான், இன்று மகிழ்ச்சியோடு தொடங்கி வைத்த தமிழ்ப்புதல்வன் திட்டம். இந்த திட்டம் தேர்வு செய்த இடம் கோவை மண்டலம். இங்கு அன்பான மக்கள். பாசமான மக்கள், சேவை மனப்பான்மை கொண்ட மக்கள் வாழும் பகுதி. தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதி. பழமையும், புதுமையும் கலந்த பகுதி.
நாம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். திராவிட மாடல் அரசு என்றாலே அது அனைவருக்குமானது. சமூகநீதி அரசு.
பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் கொடுத்தோம். நான் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்து விடியல் பயணம் தி்ட்டம் தான். மகளிர் உரிமைத் தொகை , மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அடுத்து மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட திட்டம் நான் முதல்வன் திட்டம்.
மாணவிகளுக்கு புரட்சிகரமான திட்டமாக புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி உள்ளோம். 3.28 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தில்நிதி கொடுக்கப்படுகிறது ஆண்களுக்கு நிதி கிடையாதா என்று மாணவர்கள் கேட்டதால், அதை ஏற்று செயல்படுத்தி்யது தான் தமிழ்ப்புதல்வன் திட்டம்.
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவை அரசு கல்லூரி 173 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கல்லூரியில் 4500 மாணவ மாணவிகள் படித்தனர். இங்கு கல்லூரியில் விடுதி, கருத்தரங்க கூடம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரி்க்கையை ஏற்று கோவை அரசு கல்லூரியில் கருத்தரங்க கூடம், விடுதி கட்டித் தரப்படும் என உறுதி அளிக்கிறேன்.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்த பாடுபடுகிறோம். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உயரணும், மாணவர்கள் கல்விக்கு தடை ஏற்பட்டால் அதை உடைத்து முன்னேறணும். தடைகள் என்பது உடைத்தெறியப்பட வேண்டும்.கல்விக்கு தடையே இருக்க கூடாது. அதற்கான உதவி செய்ய நான் இருக்கிறேன். திராவிட மாடல் அரசு இருக்கிறது. ஒலிம்பிக்கில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தைரியமாக போராடினார். தடைகளை தகர்த்து போராடினார்.நாம் எல்லோரும் பாராட்டினோம். தடைகள் உடைக்கப்பட வேண்டும். தடைகளை பார்த்து சோர்ந்து விடக்கூடாது. முயற்சி செய்து தடைகளை தகர்த்தால், வெற்றி ஒரு நாள் வசப்படும்.
உங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அனைவரும் உயர்கல்வி பயின்று முன்னேறணும்.யாரும் திசை மாறி போய்விடக்கூடாது. என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, எ.வ. வேலு , கீதா ஜீவன், மேயர் ரெங்கநாயகி , தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.