தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை ரிலீஸ் செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் நடித்த குருவாயூர் அம்பல நடையில் என்ற மலையாள திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இது வெளியான முதல் நாளே இந்த படம் தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் சுப்ரியா மேனன் கொச்சி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவரை கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் ஒரு தியேட்டரில் புதிய படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது போலீஸார் அவரை பிடித்தனர். அது மட்டுமல்லாமல் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணயில் திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்தது தெரியவந்தது. மேலும் இணையத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய ரூ 5000 கமிஷனாக ஸ்டீபன் ராஜ் பெற்றதும் தெரியவந்தது.
