தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் திடீரென ராஜினாமா செய்தார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அப்துல் ரகுமானின் ராஜினாமா செய்த நிலையில் வக்பு வாரியத்துக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், மத்திய அரசின், வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான விவகாரம், வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரம் ஆகியவை சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் மீதான நடவடிக்கை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தங்கள் கட்சியில் இருந்தவர் பதவியை ராஜினாமா செய்ததால் தங்களுக்கே தலைவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஐயுஎம்எல் தரப்பில் முதல்வருக்கு மீண்டும் வலியுறுத்தல் கடிதம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.