தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் தாங்கிக்க முடியாத துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக வணிகர்கள் இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க. தலைமையிலான அரசு தமிழ்நாட்டை அச்சுறுத்திவரும் கலாச்சாரத்தை உடனே தடுத்து நிறுத்திட உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை வேண்டும். மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும். இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.