தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. திருச்சி, மணப்பாறை, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான அறிகுறியுடன் தூறல் போட்டுக்கொண்டே இருக்கிறது.
இதுபோல சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், வேலூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,மதுரை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரையில் கனமழை கொட்டியது. கனமழை காரணமாக மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மார்க்சிய கம்யூ. மாநாடு , மாநாட்டு திடலில் இருந்து இன்று ஒரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. அந்த மண்டபத்தில் நடைபெறும் கருத்தரங்கில் தான் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
சென்னையில் கோடம்பாக்கம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் மின்னல் தாக்கியதில் ஒரு தென்னைமரம் தீப்பற்றியது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால் 8வது கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்தது.