தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, இன்றும் தமிழகத்தில் கோவை உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று ( ஆக.20) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. அதேபோல் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.