தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி இன்று மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இதைப்போல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, இன்று நாகையில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட வலியுறுத்தியும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இயற்கை பானமான கள் இறக்க அனுமதி வழங்கிட வேண்டுமென்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது கலெக்டர் அலுவலக வாசலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கோரிக்கை அடங்கிய மனுவினை ஆட்சியரிடம் வழங்க நாம் தமிழர் கட்சியினர் ஐந்து பேரை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதித்தனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிய மனுவினை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண்கள், ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் இடம் வழங்கினர். பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி, நாகையில், நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கு அரை மணி நேரம் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.