வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுவதையொட்டி தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி, பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆகியவை மற்றும் மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அழைக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட உள்ளன.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு சமீபத்தில், பால்வளம், மீன்வளம், கால்நடை பராரிப்புத்துறை செயலர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கான 3 பேர் அடங்கிய பட்டியலை அனுப்பும் படி, தமிழகஅரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கோரியது.
இதையடுத்து, தமிழக பொதுத்துறை, 3 அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை தயாரித்து அனுப்பியுள்ளது. இதில், பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டான்சிட்கோ) தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் மூத்த அதிகாரி ஒருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. வரும் அக்.29ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், விரைவில் புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.