கர்நாடக அரசு, காவிரியில் ஆண்டுக்க 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும். கடந்த ஜூன் முதல் நடப்பு செப்டம்பர் 14ம் தேதி வரை தமிழகத்திற்கு103.5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் 38.4 டிஎம்சி தான் கொடுத்தது.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் குறுவை பயிர் தண்ணீர் இன்றி கருகியது. எதிர்வரும் பருவத்தில் சம்பா நடவு செய்யவே தண்ணீா் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் பல முறை காவிரி மேலாண்மை ஆணையத்திலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடமும் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே நேற்று டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், தமிழகத்திற்கு வினாடிக்கு 12, 500 கனஅடி வீதம் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் கர்நாடகம் 3 ஆயிரம் கனஅடி தான் தர முடியும் என கூறியது. இறுதியில் 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என ஆணைய தலைவர் ஹல்தர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய 65.1 டிஎம்சி தண்ணீரை உடனே பெற்றுத்தாருங்கள் என வலியுறுத்தினர். இதற்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவிடுங்கள் என வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின்போது திமுக எம்.பிக்கள், மற்றும் வைகோ, திருமாவளவன், தம்பிதுரை, அன்புமணி, ஜிகே வாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். எனவே தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கர்நாடகம் தண்ணீர் திறக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மத்திய அமைச்சரை சந்தித்தோம். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலை குறித்து மத்திய அமைச்சர் என்ன நினைக்கிறார் என தெரியாது. காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க அறிவுறுத்துவதாக மத்திய அமைச்சர் கூறினார். வேறு எந்த உத்தரவாதமும் அவர் கொடுக்கவில்லை.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆகிறது வரவேற்க தக்கது. இதற்கெல்லாம் முன்னோடியாக தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.