தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு அதை நிறுத்தியது. 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே, அதற்கு முன்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் நீர் பங்கீட்டு விவகாரத்தை முடிக்க கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று (திங்கட்கிழமை) டில்லியில் நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் இன்று மாலை மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச இருக்கின்றனர். அப்போது காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறார்கள்.