புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று திருச்சி வந்தார். திருவையாறு செல்லும் வழியில் அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம் பாரத தேசம். இதை துண்டாடக்கூடாது. தமிழ்நாடு தனிநாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நாம் பாரத தேசத்தின் ஒரு அங்கம். தன்நாட்டுக்குள், ஒரு தன்நாடு தமிழ்நாடு. நாடு துண்டாடப்படுவது கொண்டாடப்படக்கூடாது. சிலர் பிரிவினை வாத கருத்துக்களை தெரிவிக்கும் போக்கு காணப்படுகிறது.
கவர்னர் கருத்து சொல்லக்கூடாது என்பது இல்லை. அவர் சொன்ன கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும். எந்த பொருளில் அவர் பேசி உள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் இணைந்து இருக்க வேண்டும் என்பதை அவர் சொல்லி உள்ளார். அவர் மாநில முதல் குடிமகன் எனவே கருத்து சொல்கிறார். அது அவரது கருத்து. அவர் கருத்து சொல்லக்கூடாது
என்பது அல்ல.
வாசன் இசை ஆர்வலர். அவரது அழைப்பின் பேரில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு வந்து உள்ளேன். இதில் பல குடியரசு தலைவர்கள், கவர்னர்கள் கலந்து கொண்டுள்ளனர்.. வாசனும் நானும் இணைந்திருக்கிறோம். அவர் இசை ஆர்வலர், நான் ஆளுனர். அண்ணன் முதல்வர்(ஸ்டாலின்) அவர்கள் நாங்கள் மதத்தை எதிர்க்கவில்லை. மதவாதத்தை தான் எதிர்க்கிறோம் என கூறி உள்ளார். மதத்தை வாதப்பொருளாக ஆக்கியது யார் என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா மதங்களும்இணையாக மதிக்கப்பட வேண்டும்.
தமிழக பா.ஜ. தலைவர் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. நான் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. எனவே அண்ணாமலைக்கு நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது. அமைச்சர் உதயநிதிக்கு எப்படி ரிப்போர்டு கார்டு என்னால் கொடுக்க முடியாதோ, அதுபோல அண்ணாமலைக்கும் கொடுக்க முடியாது. பத்திரிகையாளர்களை பார்த்தது மிக மிக மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.