திருச்சி பாரதிதாசன் பல்லைக்கழகத்தில் இன்ற காலை 38வது பட்டமளிப்பு விழா நடந்தது. 10.45 மணிக்கு பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா அரங்கம் வந்தார். அதைத்தொடர்ந்து தேசியகீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து துணைவேந்தர் செல்வம் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி, அறிக்கை வாசித்தார். அதைத்தொடர்ந்து விழா தொடங்கியது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி அவர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்(கரகோஷம்) பின்னர் மாணவர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழுங்கு என முழங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுக்கு முன்னாடி நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தால் இன்று நாம் உயர்ந்து இருக்கிறோம்.
நம் திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் கல்வி என்று கல்வி புரட்சியை நடத்தி வருகிறது. அனைவருக்கும் அனைத்து வித வசதிகளையும் உருவாக்கி உள்ளோம். உயர்கல்வி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் கல்வியை ஊக்கப்படுத்த கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படுகிறது. எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு திட்டம் வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்லூரி கல்வி, ஆராய்ச்சி கல்வி என்பதே நமது கொள்கை. பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. இதை தொடங்கியது நமது திராவிட மாடல் அரசு. அனைத்து உட்கட்டமைப்பை உருவாக்கி உள்ளதால் தான் இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அகில இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளது. 15 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 146 கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் 328 கல்லூரிகள் சிறந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. மாணவர்களாகிய நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். நீங்கள் தேர்வு செய்த துறையில் சிறந்து விளங்குங்கள், நாட்டுக்கும், பெற்றோருக்கும் சேவை வழங்குங்கள். பட்டம் வழங்கிய பல்கலைகழகங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமைதேடித் தாருங்கள். தந்தையாக இருந்து உங்களுக்கு இதை நான் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார்.