புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வழக்கம் போல வந்து புதுகை மீனவர்கள் 13 பேரையும், 3 படகுகளையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து காங்கேசன்துறை ஊர்க்காவல்படை முகாமில் வைத்துள்ளனர். இதனால் புதுகை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இலங்கை ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தமிழக மீனவர்களை கைது செய்து வந்தபோதிலும் மத்தி்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் இலங்கை ராணுவம் நமது எல்லைக்குள்ளேயே புகுந்து தமிழக மீனவர்களை கைது செய்கிறது என புதுகை மீனவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.