தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலத்தில் இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் வேளாங்கண்ணியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. 66 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மற்றும் பயிற்சி மையத்தினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் அமைந்துள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் அமைந்துள்ள பேருந்து உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரத்தின் செயல்பாடுனை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
பழைய பேருந்துகளை மாற்றவும், எஞ்சின் தரமாக உள்ள பேருந்தின் பாடி கூடுகளை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். 1500 பேருந்துகளுக்கு புதிய பாடி கட்டுதல் பணிகள் நடைபெற்று வருவதால் மழை காலங்களில் பேருந்துகளில் ஒழுகும் பிரச்சினை இருக்காது. தேசிய அளவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவே காங்கிரஸ்
தலைமையில் புதிய அணி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த காரணத்தால் திமுகவுக்கு எதிராக பாஜக தூண்டுதல் பேரில் சோதனை நடத்துகிறது. திமுக மற்றும் திமுக தலைவரை கண்டு பிரதமர் மோடி அச்சம் அடைந்துள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.. தமிழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத மத்திய பிரதேசத்தில் திமுக தலைவரை விமர்சித்து மோடி பேசுகிறார். அரசு விழாவிலும் திமுக தலைவரை பற்றி பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார். அண்ணாமலையை பாஜகவில் இருப்பவர்களே பொருட்டாக மதிக்கவில்லை என்பதே இன்றைய நிலை .
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.