தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகளை இன்று வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.