2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50 மணிக்கு சபைக்கு வந்தார். முன்னதாக தமிழக முதல்வரை, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பட்ஜெட் அறிக்கை குறித்து ஆலோசித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வந்ததும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. சிறிது நேரத்தில் இந்த கூட்டம் முடிந்ததும் அதிமுகவினரும் சபைக்குள் வந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் கூறி சட்டமன்ற கூட்டத்தை தொடங்கி வைத்து நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறினார். அதைத்தொடர்ந்து தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதம் இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அதிமுகவினர் கூறும் எந்த கருத்தும் அவைக்குறிப்பில் ஏறாது. அமைதியாக இருங்கள். பட்ஜெட்டை கவனித்து அதன் நிறை குறைகளை கூறுங்கள் என சபாநாயகர் கூறினார்.
ஆனால் அதிமுகவினர் அதை ஏற்காமல் கூச்சல் போட்டனர். ஆனாலும் தொடர்ந்து நிதி அமைச்சர் பட்ஜெட் அறிக்கை படித்து கொண்டிருந்தார்.(அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அமைச்சரின் பட்ஜெட் உரையை தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என கூறினார்) அதைத்தொடர்ந்து அதிமுகவினர் எடப்பாடி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.