Skip to content
Home » கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-25ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக  காலை 9.43 மணிக்கு முதல்வர்  ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் அழைத்து சென்றனர். 9.58 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சபைக்கு வந்தார்.   முன்னதாக  அமைச்சர்கள்,  உறுப்பினர்கள்  சபைக்கு வந்து அமர்ந்திருந்தனர். அதைத்தொடர்ந்து சரியாக 10 மணிக்கு  சபாநாயகர்  அப்பாவு  திருக்குறள் வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்து, பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை அழைத்தார்.

தங்கம் தென்னரசுவும்  திருக்குறளை கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரத்தை கொண்டது தமிழ்நாடு.  நிதி நிலை அறிக்கை தயாரிக்க உதவிய  முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட  பட்ஜெட்டால் தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்ந்துள்ளது.

வானவில்லைப்போல 7 அமசங்கள் அடிப்படையில்  பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நிதி, தமிழர்ளின்  நலன், அறிவுசார் பொருளாதாரம்,  சமத்துவ பாதை, பசுமை வழிப்பயணம், தமிழர் பண்பாடு. மேற்கண்ட 7 இலக்குகளை முன்வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக  மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.  உலக நாடுகளில் உள்ள நூலகங்களில்  தமிழ் நூல்கள் இடம்பெறச்செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 23 மொழிகளில் மொழி பெயர்க்க  ரூ.2 கோடி ஒதுக்கப்படும். மின் நூலகம்  அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  கர்நாடகம், ஒடிசாவிலும் அகழ்வாராய்ச்சி  மேற்கொள்ளப்படும்.  கீழடியில் ரூ.17 கோடியில்  திறந்தவெளி அரங்கு அமைக்கப்படும்.

கிராமங்களில் 8 லட்சம் குடிசைகள் உள்ளதாக தெரிகிறது. அவை  படிப்படியாக கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும்.  இதற்காக தமிழ்நாட்டில்  கிராமப்புறங்களில் 2030க்குள்   8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டுக்கு ரூ.3.5 லட்சம் ஒதுக்கப்படும்.    இந்த திட்டத்திற்க கலைஞரின் கனவு இல்லம் என பெயரிடப்படுகிறது. இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்படும்.  குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்.  கிராமங்களில் 2 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும். இதற்காக ரூ.365 கோடி ஒதுக்கப்படும்.ரூ.1000 கோடியில் சாலை  வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 100 நாள் வேலை திட்டத்திற்கு  3,300 கோடி ஒதுக்கப்படும்.

தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை 2.2%.  வறுமை கோட்டுக்கு  கீழ் உள்ள 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.  5 ஆயிரம் நீர் நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.  மாநகராட்சி விரிவாக்க பகுதி்களில் சாலைகள் விரிவாக்கத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.  சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடியில் திட்டம்.

வட சென்னை மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.   வட சென்னை கழிவு நீர் மேம்பாட்டுக்கு 946 கோடி  ஒதுக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் 2000 கி.மீ. சாலைகள் அமைக்க ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.  மகளிர் உரிமைத் தொகைக்கு இந்த ஆண்டு ரூ.13 ஆயிரத்து 720  கோடி ஒதுக்கப்படும்.  பூந்தமல்லியில் திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு முதல்  புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.   இதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும்  கல்லூரி செல்லும்போது   மாதம் ரூ.1000 வழங்கப்படும்.   இதற்காக  ரூ.370 கோடி ஒதுக்கப்படுகிறது.

5 லட்சம் ஏழை குழந்தைகளை கண்டறிந்து  தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் அவர்களுக்கு  உதவிகள் மேற்கொள்ளப்படும். மதுரை, சேலத்தில் தடையற்ற குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படும்.  கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்  முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்.  இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கப்படுகிறது.  நடப்பாண்டில் 10 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்படும்.

சென்னை, மதுரை, கோவையில் 3  தோழி விடுதிகள்  26 கோடியில் கட்டப்படும்.  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2 ம் கட்ட பணிகளுக்கு  நிதி ஒதுக்கப்படுகிறது.  உயர் கல்வி பயில விரும்பும் 3ம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.  தமிழ்நாட்டின்  காவிரி, வைகை, தாம்ி்ரபரணி், நொய்யல் உள்ளிட்ட நதிகளை சீரமைக்க திட்டம் தயாரிக்கப்படும்.

பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.  மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்படும்.  ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன்  வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு.  பள்ளி கல்வித்துறையில் 44, 042 கோடி ஒதுக்கீடு.   உயர்கல்வித்துறைக்கு  ரூ.8ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 25 அரசு மருத்துவமனைகளில்  போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில்  ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில்   ரூ.120 கோடியில் சிப்காட் ஏற்படுத்தப்படும். விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ  தமிழ்ப்புதல்வன் திட்டம்  தொடங்கப்படும்.  ரூ.1,100 கோடியில் கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஏற்படுத்தப்படும். 20 லட்சம் சதுர அடியில் இது அமையும்.   சுகாதாரத்துறைக்கு 20,198 கோடி ஒதுக்கப்படும். கலைஞர்  பெயரில் கோவையில் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும். முதன் முறையாக  உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.அ மத்திய அரசு பணிகளில் சேர 1000 பேருக்கு பயிற்சி அளிக்க  நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  சென்னை, திருச்சி, கேோவை, மதுரை, சேலத்தில்  பொது இடங்களில் இலவச வைபை  வசதி ஏற்படுத்தப்படும்.

புற்றுநோய் மேலாண்மை இயக்கம் ஏற்படுத்தப்படும்.  1 டிரில்லியன்  பொருளாதாரம் என்ற இலக்கை அடைய  மின் சாரம் அதிகம் தேவைப்படும்.  அதற்கான  நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.  நியோ டைடல் பார்க் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.  பெண்கள், மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அளிக்கப்படும்.

தூத்துக்குடியில்  விண்வெளி உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்.  மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாட்டில் 6 இடத்தில் பாரா விளையாட்டு மைதானங்கள்  ஏற்படுத்தப்படும்.

 

தொடர்ந்து அவர் பட்ஜெட்  உரை படித்து வருகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!