டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று டில்லி சென்றார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக டில்லியில் திறந்துவைத்த அதிமுக அலுவலகத்தை அவர் பார்வையிட்டார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், மு.தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
தனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், வலுவான கூட்டணியை அமைக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், அதிமுகவின் 2-ம் கட்டத் தலைவர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கலாம் என்று பழனிசாமியிடம் தெரிவித்து வந்தனர். அதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றனர்.
நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தம்பிதுரை, கே.பி. முனுசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம், கூட்டணி தொடர்பாக அவர்கள் பேசியதாக தெரிகிறது. அத்துடன் அண்ணாமலை இனி தங்களை விமர்சித்து பேசுவதை நிறுத்தச்சொல்லுங்கள் என்றும் கோரிக்கை வைத்தார்களாம்.
எந்த நிலையிலும் சசிகலா, ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என எடப்பாடி உறுதியாக கூறினாராம். இது குறித்து தேர்தல் நேரத்தில் பேசிக்கொள்ளலாம் என்று அமித்ஷா கூறியதாகவும் தெரிகிறது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி அதிமுக , பாஜக கூட்டணி அரசு தான் அமைக்க வேண்டும் என்று பேசியதாக தெரியவருகிறது. கூட்டணி அரசுக்கு எடப்பாடி ஒத்துகொண்டாரா என்பதை அவர் தெரிவிப்பார் என்று பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தனது எம். பி. பதவி முடிவடைய உள்ளதால், அதிமுகவின் சார்பில் ஒரு எம்.பி. பதவியை தனக்கு பெற்றுத்தரும்படியும் கோரிக்கை வைத்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.