Skip to content
Home » சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

  • by Authour

கேப்டன், கருப்பு எம்.ஜி.ஆர், பேரரசு,  சொக்கத்தங்கம், என பல்வேறு அடைமொழிகளால் தமிழ் மக்கள் போற்றி அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.  நேற்று காலை   அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி தமிழகத்திற்கு பேரிடியாக அமைந்தது.  கட்சி பேதமின்றி அனைத்து கட்சித்தலைவர்களும் வந்து  விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.  நேற்று காலை 9.15 மணிக்கு அவரது உடல்  சாலிகிராமத்தில் உள்ள  வீட்டுக்கு கொண்டு வந்தனர்.  அங்கு குடும்பத்தின் சார்பில் அவருக்கு சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர்  பொதுமக்கள் அஞ்சலிக்காக  கோயம்பேட்டில் உள்ள  தேமுதிக அலுவலகம் கொண்டு வந்தனர்.

அந்த அலுவலகம் கொள்ளாத அளவுக்கு மக்கள்  கூட்டம் திரண்டது. இந்த கூட்டத்துக்கு மத்தியில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன்,  அவரது உடலுக்கு  முழு அரசு மரியாதை அளிக்க உத்தரவிட்டார். அத்துடன்   அவரது உடலுக்கு பொதுமக்கள் , மற்றும் முக்கிய பிரமுகர்கள்  சிரமமின்றி அஞ்சலி செலுத்த  தீவுத்திடலில் உடலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று அவரது மரண செய்தி  காலை 9 மணி அளவில் தான் அறிவிக்கப்பட்டபோதும், அதற்கு முன்னதாகவே அவருக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்ற செய்தி கசிந்து விட்டது. இதனால் கட்சி அலுவலகம், அவர் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரி,  விஜயகாந்த் இல்லம் ஆகிய 3 இடங்களிலும்  தொண்டர்கள் சோகத்துடன் திரண்டனர்.  சிறிது  நேரத்தில் 3 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர். எனவே  விஜயகாந்த் உடல்நிலை பற்றிய துயரமான செய்தி வெளியாகப்போகிறது என்பதை ஊடகங்கள் பூடகமாக அறிவித்து விட்டன.

நேற்று காலை முதல் இன்று மதியம் வரை கூட்டம் குறையவில்லை. விடிய விடிய மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். நடிகர் விஜய் நள்ளிரவு 11.30 மணிக்கு தான் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று காலை திரைபிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி,  சத்யராஜ், பாக்யராஜ்,  பார்த்திபன், குஷ்பூ,  சுந்தர் சி,  கவுண்டமணி,  ராதாரவி,  வாகை சந்திரசேகர், தியாகு,  மற்றும் முன்னாள் முதல்வர்கள்  எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சா்கள், இயக்குனர்கள்,  என திரையுலகமே திரண்டு  வந்து அஞ்சலி செலுத்தி வருகிறது.

தமிழ்த்திரையுலகம்  மட்டுமல்ல,  மலையாள, ஆந்திர நடிகர்களும் கூட விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.  தேமுதிக கட்சியினர் மட்டுமல்லாமல், பாமர மக்களும், சாதாரண சாமான்ய மக்களும், , கூலித் தொழிலாளர்களும் கூட, ஒரு நாள் வேலைக்கு  செல்லாமல்  இன்று அஞ்சலி செலுத்திய காட்சியை காணமுடிந்தது.  சம்பந்தமே இல்லாதவர்கள் கதறி அழுதனர். அவரால் எந்த உதவியும் பெற்றிருக்காத மக்கள் கூட  கண்ணீர் சிந்தினர்.

எப்படி , இந்த விஜயகாந்தால் ஒட்டுமொத்த அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க முடிந்தது. ? நடிகர் என்பதாலா,  அல்லது தேமுதிக நிறுவனர் என்பதாலா?  இரண்டிலும் இல்லை.  நடிகர் பார்த்திபன்  இன்று ஒரு  வார்த்தை சொன்னார்.  விஜயகாந்தின் மனித நேயம் தான் அனைவரையும் ஈர்த்தது. அந்த மனித நேயத்துக்கு நான் அடிமை என கூறினார். அந்த மனித நேயம் தான்  இன்று மக்கள்  கூட்டத்தை கூட்டி உள்ளது.

தமிழகத்தில் வாரி வழங்கிய வள்ளல் என்று எம்.ஜி.ஆரை மக்கள் அழைப்பார்கள். அதே குணம் விஜயகாந்த்துக்கும் இருந்தது. ஆனால் இவர்  வெளிப்புற நிறத்தில் கருப்பு என்பதால் கருப்பு எம்.ஜி.ஆர் என  பாசத்தோடு  விஜயகாந்த்தை தமிழ் மக்கள் அழைத்தனர். இன்னும் பல  கிராமங்களில் விஜயகாந்த்தை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக பார்த்தனர். அதனால் தான் இன்று குக்கிராமங்களில் கூட விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து  பிளக்ஸ் வைக்கப்பட்டு உள்ளது.  புதுக்கோட்டை, சீர்காழி என பல ஊர்களில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

14.9.2005ல் தான் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக அவர் அரசியல் கட்சி தொடங்கும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆனால் அவர்   வாலிப பருவத்திலேயே மதுரை வீதியில் இந்தி எதிர்ப்பு போர்க்குரல்  எழுப்பி, தன்னை ஒரு பச்சைத்தமிழனாக  மதுரை மண்ணுக்கு காட்டியவர்.

1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான ‘இனிக்கும் இளமை’ படம் மூலம்  அவரது சினிமா  வாழ்க்கை தொடங்கியது. அது பெரிய வெற்றியை கிட்டவில்லை.  ‘சட்டம் ஒரு இருட்டறை’.  சிவப்பு மல்லி போன்ற படங்கள் அவரை  பிரபலப்படுத்தியது.  விஜயகாந்த் மாற்று மொழிப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,  சட்டம் ஒரு இருட்டறை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

“தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்” இதனால் அனைத்து தரப்பினரின் அன்புக்கும் பாத்திரமானார்.

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் எனும் திரைப்படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில்  நடித்தார். விஜயகாந்த்.இந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகன் விஜயை திரைக்கு அறிமுகப்படுத்த உருவாக்கிய படம் தான் செந்தூரப்பாண்டி. இந்த படத்தில்  விஜய்க்கு அண்ணனாக நடித்து   விஜய் சினிமா பிரவேசத்திற்கு வித்திட்டவர் விஜயகாந்த். இப்படியாக படிப்படியாக  திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர் விஜயகாந்த்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, அனைத்து மொழி திரையுலகிலும், கதாநாயகன், கதாநாயகி என்றால் அவர்களுக்கு  தனி கவனிப்பு இருக்கும். தங்கும் இடம், உணவு, உடை என அனைத்தும் அவர்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வை போக்கியவர்  விஜயகாந்த். அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான். விஜயகாந்த் என்ன சாப்பிடுகிறாரோ அது தான் அந்த  குழுவின் கடைநிலை ஊழியருக்கும் என்ற சமத்துவத்தை கொண்டு வந்த சமத்துவ நாயகன்   விஜயகாந்த். எனவே தான் திரையுலகம் இன்று விஜயகாந்த்துக்காக கண்ணீர் விடுகிறது.

நடிகர் சங்கத்தலைவரான விஜயகாந்த்,  சங்கத்தின் கடனை அடைத்து,  சங்கத்தின் பெயரில் ரூ.1 கோடியை டெபாசிட்டும் செய்தார்.  இப்படி எடுத்த காரியத்தில் எல்லாம்  பொதுநலனே அவருக்கு முக்கியமாக இருந்தது. எனவே தான் இன்று தமிழகம் அவருக்கு நன்றிக்கடனை  திருப்பி செலுத்துகிறது.  இதுவரை எந்த தலைவருக்கும் இல்லாத அளவு,  ஒரு முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருக்கு  விடாமல் 35 மணி நேரமாக  வங்க கடல் அலை போல  ஓயாது மக்கள் அலை அலையாய் வந்து அஞ்சலி செலுத்தினர்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்– என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு  உயிர் கொடுத்தவர்  கேப்டன் விஜயகாந்த் .  நடிகர், கட்சித்தலைவர்,  என்பதை கடந்து ஒரு நல்ல தமிழ்மகனை தமிழகம் இன்று இழந்து நிற்கிறது . அதை  யாராலும் ஈடு செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *