தமிழக சட்டசபையில், பிப்., 19ம் தேதி பொது பட்ஜெட், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த இரண்டு நாட்கள், பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதன்பின், துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்காக, ஜூன் 20ல் சட்டசபை துவங்கியது. வழக்கமாக ஒரு மாதம் இக்கூட்டத்தொடர் நடக்கும். ஆனால், இம்முறை 10 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. ஜூன் 29ல் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. சட்டசபை விதிகளின்படி, கூட்டம் முடிந்த நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள், மீண்டும் சபையை கூட்ட வேண்டும். அந்த வகையில், இன்று சட்டசபை கூடுகிறது. இம்முறை மூன்று நாட்கள் சபை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்றும், நாளையும் மட்டுமே சட்டசபை கூட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சட்டசபை துவங்கியதும், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன் உட்பட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதையடுத்து, கேள்வி நேரம் முடிந்த பின், 2024 – 25ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டசபையில் தாக்கல் செய்வார். மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார். அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து, கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கும். நாளையும் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடரும். அதன்பின், விவாதத்திற்கு நிதி அமைச்சர் பதில் அளிப்பார். அதைத்தொடர்ந்து, கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை மீது ஓட்டெடுப்பு நடக்கும். இக்கூட்டத்தில், சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளன.