தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் கட்டப்பட்டு வரும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் கட்டுமான பணியை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 1.97 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு குறுவை பருவத்தில் 2.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரபி பருவத்தில் 8.54 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த ஆய்வின்போது, உணவுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தமிழ் நங்கை மற்றும் பலர் உடன் இருந்தனர்.