தமிழ்நாடு முழுவதும் நாளை (09.12.2023) 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நாளை (09.12.2023) 3000 மருத்துவ மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும். உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000- த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அந்தவகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.
தற்போது பருவமழைக்காலமாக உள்ள காரணத்தினால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நாளை (09.12.2023) அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களிலும் அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும். மேலும் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.