கடந்த 17ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துச்சென்றது. இதேபோல் காரைக்கால் மீனவர்கள் 15 பேரை கடந்த 15-ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களில், இரண்டு மீனவர்களுக்கு தலா 6 மாதம் சிறை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மேலும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மற்றொரு மீனவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்களில் ஒரு மீனவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராமேஸ்வரம், காரைக்காலை சேர்ந்த 33 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை படையினரால் கைது செய்யப்படுவதும், பின்னர் விடுவிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. எனினும் இதில் சில மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுவதால் அவர்களின் குடும்பம் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அண்மை காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இலங்கை படையினரின் அட்டூழியத்தை மத்திய மாநில அரசுகள் தடுக்காவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.