காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது, இளைய தலைமுறையினரிடமிருந்து துவக்கப் பெறவேண்டும். எனவே, தமிழக முதல்வரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக பசுமை பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் படி 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற 2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது. இந்தப் பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் ஏனைய பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். பள்ளியின் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.
இப்பள்ளிகளானது பசுமைப் பள்ளிக்கான முன்னோடி பள்ளிகளாக விளங்கி மற்ற பள்ளிகளும் பசுமைப் பணிகளை மேற்கொள்ள ஊக்கமாக அமையும். மேலும், இந்தப் பள்ளிகள் பசுமை திட்டங்கள் தொடர்பான தகவல் திரட்டை உருவாக்குவதற்காக பசுமை அட்டவணையில் மதிப்பீடு செய்யப்படும்.