வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம், தி.நகர், அடையாறு, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் திடீரென மழை பெய்தது. பெருங்குடி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 22-ந் தேதி வரை இடி மின்னலுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.