Skip to content
Home » நேரம் தவறாத விமானம்…. கோவை விமான நிலையம் 13 வது இடம்..

நேரம் தவறாத விமானம்…. கோவை விமான நிலையம் 13 வது இடம்..

உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும். நேற்று வெளியான இந்த பட்டியலின்படி, உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் கோவை விமான நிலையம், இந்த பட்டியலில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவீத ஓடிபியுடன் (On-Time Performance) முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நேரம் தவறாமல் இயங்கும் முதல் 10 விமான நிலையங்கள் பட்டியலில் கோவை விமான நிலையம் 10-வது இடத்தில் உள்ளது. நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இண்டிகோ’, 83.51 சதவீத ஓடிபியுடன் 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் 95.63 சதவீத ஓடிபியுடன் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. சஃபைர் விமான நிறுவனம் 95.30 சதவீத ஓடிபியுடன் இரண்டாவது இடத்தையும் யூரோவிங்ஸ் விமான நிறுவனம் 95.26 சதவீத ஓடிபியுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. நேரம் தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!