கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்த பின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
கள்ளச்சாராய சாவு பிரச்னையை தமிழக அரசு இட்டு செல்லுகிற முறை சரியில்லை . திமுகவினா் தான் இதில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசு இதை கண்டுபிடிக்கப்போவதில்லை. எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்பது தான் எங்கள் தீர்க்கமான கோரிக்கை. பலர் கண் பார்வை இழந்துள்ளனர், பலர் அபாய கட்டத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கலெக்டர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர். கலெக்டருடன் சேர்ந்து பொய் சொன்ன எம்.எல்.ஏ மீது நடவடிக்கை இல்லை.
அந்த துறையின் அமைச்சர், அல்லது முதல்வர் இதுவரை அங்கே சென்று பார்க்கவில்லை . ஒரு குற்றம், பிரச்னை நடந்தது என்றால் அதை கண்டிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. பாஜக போராட அனுமதிக்கவில்லை. பாஜகவினரை கைது செய்கிறார்கள். போலீசார் பாஜகவினரை மோசமாக நடத்தி்னார்கள். அரசியல் கட்சித்லைவர்களை குற்றவாளிகள் போல நடத்தினார்கள். இது குறித்து நாங்கள் கவர்னரிடம் புகார் செய்துள்ளோம்.
கவர்னர் தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர். எனவே அவரிடம் புகார் செய்தோம். மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லை. ஏன் சிபிஐ விசாரணை வேண்டாம் என்கிறார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை ஏன் தடுக்கிறார்கள். சிபிஐ விசாரணை கட்டாயம் வேண்டும் என்கிறோம். சிபிஐ விவாரணை வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. எங்களை அரசியல் ஆக்காதீர்கள் என்கிறார்கள். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசியல் ஆக்காமல் இருந்தார்களா, ஏன் முதல்வர் அங்கு போகவில்லை. ஆறுதல் சொல்ல போகவேண்டாமா? குற்றவாளிகளை பாதுகாக்க ஆளுங்கட்சி்முயற்சி செய்கிறது. கருணாபுரத்திற்கு ஒரு கருணை கிடைக்காதா என்பது தான் எங்கள் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.