ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டார். விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என பதிவிட்டுள்ளார்.
