கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், இந்நிகழ்வின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அண்ணாமலை அருகே நின்றிருந்த அவர் மேடையின் முன்பகுதிக்கு வந்து மைக்கில் தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தும்படி கூறியதுடன், கன்னட வாழ்த்தை போடுங்கள் என்றார். அதன்படி கன்னட வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தேர்தல் பொறுப்பாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அண்ணாமலை, தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படும் நிகழ்வை எதுவும் தெரியாதவர் போல அண்ணாமலைசர்வசாதாரணமாக எதுவுமே நடக்காதது போல நின்றுகொண்டிருந்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் மற்றும் கர்நாடக தமிழர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதன் மூலம் தமிழர்கள் ஓட்டுக்களை வாங்கலாம் என நினைத்த நிலையில் இப்போது கிடைக்கும் ஓட்டுகளையும் ஈஸ்வரப்பா தடுத்து நிறுத்தி விட்டார் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டரில் “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்” என்று பதிவிட்டுள்ளார்.