தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் வெற்றியைத் தேடித்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்ப்பாடத்தில் 100க்கு 100 மார்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, விளயைாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார், 100க்கு 100 மார்க் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கமாக ரூ.10 ஆயிரம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது போல கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ரூ.1000 வழங்கப்படும். நீட் மோசடி தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம். மாணவிகள் படித்துக்கொண்டே இருங்கள். உங்களுக்கு சொல்வதெல்லாம், படிங்க, படிங்க, படித்துக்கொண்டே இருங்க.
கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு இது பொற்காலம். தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பாராட்டு சான்றிதழ் ஒட்டு மொத்தமாக அந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் அங்கீகாரம்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ், சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, மேயர் பிரியா ஆகியோரும் பங்கேற்றனர்.